ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில், 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இயக்கப்பட்ட பேருந்துகளில், ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக, போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம், 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களில் மட்டும், 8 ஆயிரத்து 490 பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாகவும், இதனால், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post