36 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 9-வது இடம்

18 வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 50 புள்ளி 59 வினாடிகளில் இலக்கை அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை தட்டிச்சென்றார். ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பலிக்கல் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். குதிரையேற்ற பந்தயத்தில் இந்திய வீரர் பவாத் மிர்சா, வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அதேபோல், குதிரையேற்றத்தின் அணிகளுக்கான ஜம்பிங் பிரிவில் பவாத் மிர்சா, ராகேஷ் குமார், ஆஷிஷ் மாலிக், ஜிதேந்தர்சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச்சென்றது. பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகள் சிந்து மற்றும் சாய்னா ஆகியோர் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்தனர். ஆண்கள் ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி, இலங்கையுடன் மோதுகிறது. வில்வித்தை போட்டியில் பெண்கள் அணிக்கான காம்பவுண்ட் பிரிவில் முஸ்கன் கிரார், மதுமிதா குமாரி, ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதுவரை 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலத்துடன் 36 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.

Exit mobile version