கேரள அரசுத் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த பெண் ஒருவர், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய விவகாரத்தில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கேரள தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக இருந்த ஸ்வப்னா, வெளிநாட்டிலிருந்து தங்கத்தை 30 கிலோ தங்கத்தை கடத்தி வந்து சிக்கியுள்ளார். கேரள மக்களுக்கு, ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிவாரணம் பெறுவதாகக் கூறி, முதலமைச்சர் அலுவலகம் பெயரிலேயே இதுவரை இவர் மொத்தமாக 500 கிலோ அளவிற்கு தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஸ்வப்னா, கேரள அரசின் தகவல் தொழில்நுப்டப் பிரிவின் செயலாளர் என்பதால், விமான நிலையத்தில் இவரிடம் பெரிதாக சோதனை நடத்தப்படுவதில்லை என தெரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஸ்வப்னா, கடத்தல் சாம்ராஜ்யம் நடத்தி வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், முதலமைச்சர் அவரை செயலாளர் பணியில் நியமித்தது ஏன் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. முதலமைச்சர் பினராயி விஜயனுடன் இவர் நேரடி தொடர்பில் இருந்ததால், தங்கக் கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. எனவே, பாரபட்சமற்ற விசாரணையை மத்திய அரசு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதனிடையே, ஸ்வப்னா தலைமறைவாக உள்ள நிலையில், முதவன்முகல் பகுதியில் உள்ள அவரது வீட்டில், அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை நடத்தி, பல்வேறு ஆவனங்களையும், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஸ்வப்னாவை கண்டுபிடிக்க, சிபிஐ-யின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது. பினராயி விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தனக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Discussion about this post