சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பெண்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜைக்கு முன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300 இளம்பெண்கள் தரிசனம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இடதுசாரியை சேர்ந்தவர்கள் என்றும் அப்பெண்கள் சபரிமலை வருவதற்கு 27-ம் தேதி வரை உள்ள நாட்களை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பெண்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது. மேலும், மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் முடிந்த பின்னர் அரசு மற்றும் நீதிமன்றம் மூலம் இதற்கான தீர்வை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம தீர்ப்பளித்ததால் மண்டல பூஜை காலம் முழுவதும் சபரிமலையில் நாள்தோறும் பரபரப்பு நிலவியது. கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள், அவ்வப்போது பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அய்யப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளாவில் இருந்து கடந்த 23-ம் தேதி ஊர்வலமாக புறப்பட்டது. இந்த தங்க அங்கி இன்று பிற்பகல் பம்பையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாளை பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை நடைபெறும். பூஜைக்கு பின்னர் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டு நாள் நடை அடைப்புக்கு பிறகு வரும் 30-ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.
Discussion about this post