பராம்பரிய பெருமையை தன்னகத்தே கொண்டுள்ள மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி சித்திரச்சாவடியை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்திர சாவடியின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பு
நரசிங்கம்பட்டி கிராமமானது மதுரை மாவட்டத்தில் மதுரை மேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மண்ணின் மரபு மாறாது பண்பாட்டின் மணம் கமழும் நரசிங்கம்பட்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்திரசாவடி காணப்படுகிறது.
அவ்வூர் மக்களின் வாழ்வோடு ஒன்றிப் போன இந்தச் சாவடி கால ஓட்டத்தினாலும் போதிய பராமரிப்பு இல்லாததாலும் சிதலமடைந்து வருகிறது
சாவடியின் சுவர்களில் 18ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ராமாயண காட்சிகளை சித்தரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன. சாவடியின் சுற்றுச்சுவர் பச்சை முட்டையின் வெள்ளைக்கரு கொண்டு கட்டப்பட்டுள்ளதால் பளபளவென மெருகேறிக் காணப்படுகிறது. அச்சுவற்றில் வண்ண மூலிகைகளைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் நூற்றாண்டைக் கடந்தும் காணப்படுகின்றன.
ஆடித் திருவிழாவின் போது சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து மதுரை அழகர் கோவிலுக்கு செல்லும் வடங்கள் இன்றும் சித்திரச் சாவடியிலிருந்து தான் செல்லும் என பெருமிதமாகத் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்…
மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இங்கு வைத்து பஞ்சாயத்து செய்யப்படுகிறது. பஞ்சாயத்தின் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்படுவர் எனவும் கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்தரச்சாவடி ஊர்பெரியவர்களை ஒருங்கிணைப்பதில் உள்ள பிரச்சனையால் கவனிப்பாரற்று கிடப்பதாக தெரிவிக்கின்றனர் இக்கிராமத்து இளைஞர்கள்…
தன்னுடைய பாரம்பரியத்தை அசைபோட்ட படியே மெதுவாக அழிவைச் சந்தித்து வரும் சித்திரச்சாவடியை தமிழக அரசு புனரமைத்து தரவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post