திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது அம்மாநில பாஜகவினரை உற்சாகம் அடைய செய்துள்ளது.
இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவக்கூடும் என தகவல் வெளியானது. இந்தநிலையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சுப்ராங்சு ராய் உட்பட 3 எம்.எல்.ஏக்களும், 60 கவுன்சிலர்களும் திடீரென டெல்லி சென்றனர். அங்கு பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் அவர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கைலாஷ் விஜய்வர்கியா, இந்த இணைப்பு எதிர்காலத்திலும் தொடரும் என்றார். இதனால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது. தற்போது பாஜகவின் இணைந்திருக்கும் சுப்ராங்சு ராய், பாஜக மூத்த தலைவர் முகுல் ராயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.