போதைப்பொருள் வழக்கில் நடிகைககளிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், நடிகைகளின் செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே சிறப்புக்குழுவுடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைவர் ஆலோசனை நடத்தியிருப்பதன் மூலம் விசாரணை அடுத்தக் கட்ட நகர்வுக்கு சென்றுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் விவகாரத்தில், திரைநட்சத்திரங்கள் போதை மருந்து பயன்படுத்தியது குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலத்தின்படி முன்னணி நடிகைகள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என 50 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதில், முன்னணி நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான், ஷ்ரதா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று தீபிகாபடுகோனிடம் நடத்தப்பட்ட பல மணிநேர விசாரணையில், வாட்ஸ்அப் உரையாடல் உண்மை என்பதை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. விசாரணையின் போது, தமக்கு போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் இல்லை என்று தீபிகா மறுத்ததாகவும், அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணையை எதிர்கொள்ள முடியாமல் மூன்று முறை அழுததாகவும் கூறப்படுகிறது.
இதே போன்று, நடிகைகள் ஷ்ரதா கபூர், சாரா அலிகானிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சுஷாந்த்துடன் கேதார்நாத் படத்தில் நடித்த சாரா அலிகான், தாய்லாந்து படப்பிடிப்பின்போது அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியதை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைக்குப் பிறகு நடிகைகளின் செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள அதிகாரிகள், அதில் உள்ள வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, நடிகைகளிடம் விசாரணை நடத்திய சிறப்புக்குழுவை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைவர் ராகேஷ் அஸ்தானா சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் Kshitij Prasad-ஐ 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
Discussion about this post