கொரோனா வைரஸால் பல மாநிலங்களில் பெற்றோர் இருவரையும் இழத்தல், தாய், தந்தை இருவரில் ஒருவரை இழத்தல் போன்ற பரிதாப நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். கொரோனா வைரஸால் ஏற்கெனவே குழந்தைகளின் கல்விச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பச்சூழலும் வேதனைக்குரியதாக மாறி குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்குகிறது.
குழந்தைகளின் நிலையை உணர்ந்த ஏராளமான தன்னார்வ அமைப்புகள், மாநில அரசுகள் குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோரை இழந்துவிட்டால் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன.
கேரள அரசும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொரோனா வைரஸால் மாநிலத்தில் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தைகளுக்காக சிறப்பு உதவித்திட்டத்தை கேரள அரசு கொண்டு வந்துள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாப்பது அவசியமானது. இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்க உதவித்தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதன்பின் 18வயதுவரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அந்த குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை அதற்கான கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post