தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக சோதனை

தமிழகத்திற்குள் 6 தீவிரவாதிகள் ஊடுவருவி உள்ளதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 2-வது நாளாக இன்றும் சோதனை மற்றும் கண்காணிப்பு தொடர்கிறது.

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் 5 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில் 2-வது நாளாக இன்றும் கண்காணிப்பு தொடர்கிறது.

இதே போல், கோவையில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையிலுள்ள கோவில்கள், வணிக வளாகங்கள், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க கோவை முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதி அச்சுறுத்தலை அடுத்து புதுச்சேரியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படி யாரேனும் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version