கடந்த 3 ஆண்டுகளில் 295 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பத்மநாபபுரம் தொகுதியில் தோட்டவாரம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா என உறுப்பினர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 2016ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை 295 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். குறைந்த பட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ஒரு லட்சம் நிதி இருந்தால்தான் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், தோட்டவாரம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை என்றார்.
ஐஐடி கல்லூரியில் உள்ள நுழைவு வாயில் மூடப்பட்டதால், வேளச்சேரி பகுதி மக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளதால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உறுப்பினர் வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சருடன் கலந்து பேசி, மூடப்பட்ட நுழைவு வாயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Discussion about this post