கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு 27ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கேரள கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த வாரம் பலத்த மழை பெய்ததால் கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி அவற்றில் இருந்து மொத்தம் நொடிக்கு மூன்று லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் குறைந்துகொண்டே வந்தது. ஒகேனக்கல்லில் நேற்று மாலை நொடிக்கு 29ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், இன்று காலையில் நீர்வரத்து இருபதாயிரம் கனஅடியாகக் குறைந்தது. இதனிடையே சாமராஜ நகர், மைசூர், மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி நொடிக்கு 27ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருவியில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து பத்தாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post