பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முன்பதிவுகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 11 முதல் 14 ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், மாதவரம், பூவிருந்தமல்லி, கே.கே நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
இந்த 6 இடங்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகள் தவிர, ஐந்தாயிரத்து 163 சிறப்பு பேருந்துகள் என நான்கு நாட்கள் சேர்த்து மொத்தம் சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மற்ற ஊர்களில் இருந்து பத்தாயிரத்து 445 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு மையங்கள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 மையங்கள், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்கள், பூவிருந்தமல்லி, மாதவரத்தில் தலா ஒரு மையம் என மொத்தம் 30 முன்பதிவு மையங்கள் செயல்பட இருக்கின்றன.
மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே நகரில் இருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும். தாம்பரம் சானடோரியத்தில் இருந்து பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூருக்கும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கும் பேருந்துகள் செல்ல உள்ளன. பூவிருந்தமல்லியில் இருந்து, வேலூர், ஆரணி, ஆற்காடு திருப்பத்தூர், காஞ்சிபுரம் செய்யாறு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. கோயம்பேட்டில் இருந்து வழக்கம்போல் செல்லும் ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Discussion about this post