கார்கில் போர் வெற்றி தினத்தின் 21வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். இந்தியா – பாகிஸ்தான் இடையே 1999ம் ஆண்டு மே 3ம் தேதி தொடங்கிய கார்கில் போர், ஜூலை 26ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போரில் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர். போரில் இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆண்டு தோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 21ம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தையொட்டி, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீரவணக்கம் செலுத்தினார். பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.
இதேபோல், சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கார்கில் போரில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
புதுச்சேரியில் 21ம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தையொட்டி கடற்கரை சாலையில் உள்ள நினைவிடத்தில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே கார்கிலில் நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டு தோறும் கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் வெற்றி நினைவிடத்தில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
Discussion about this post