வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியால் சிறை பிடிக்கப்பட்ட 2100 மீனவர்கள் மீட்பு

வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியால், 2014ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 மீனவர்களும், 381 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதி மன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மீனவர்கள் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில், வழக்கமாக வழங்கப்படும், 184 கோடியே 93 லட்சம் ரூபாயுடன், 300 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், இலங்கை அரசால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் முன்னுரிமை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியால், 2014ம் ஆண்டு மே முதல் இதுவரை, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 மீனவர்களும், 381 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை மற்றும் இந்தியா இடையில் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான நடைமுறையை ஏற்படுத்தியுள்ளதாகவும், படகுகள் மூலம் மீன்பிடிக்கும் நடைமுறையை ஆழ்கடல் மீன்பிடிக்கும் கப்பல்களாக மாற்றும் திட்டம் கடலோர மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் இந்த திட்டத்தின் கீழ், படகுகளை ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களாக மாற்றுவதற்கு ஒரு கப்பலுக்கு 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version