விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) மத்திய அரசு விருதுகள் வழங்கும். இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் பெறுபவர்களின் 9 பேரின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதில், குத்துச்சண்டை போட்டியில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற மேரி கோம், பத்ம விபூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் விளையாட்டு வீராங்கனை மற்றும் பத்ம விபூஷன் விருதை பெற இருக்கும் 4-வது விளையாட்டு நபர் என்ற பெருமையை மேரி கோம் பெறவுள்ளார். ஏற்கனவே, 2006-ல் பத்ம ஸ்ரீ விருது மற்றும் 2016-ல் பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார். தற்போது, பாரத ரத்னா விருதுக்கு பிறகு நாட்டின் மிக உயர்ந்த (பத்ம விபூஷன்) விருதை மேரி கோம் பெறுகிறார்.
இதேபோல், சமீபத்தில் உலக பேட்மிண்டன் தொடரில் தங்கம் வென்ற பி.வி.சிந்துக்கு பத்ம பூஷன் விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், மல்யுத்த வீரர் வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால், முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சுமா ஷிரூர் (Suma Shirur) மற்றும் மலையேறும் வீராங்கனைகளான தாஷி அவரது சகோதரி நுங்ஷி மாலிக் ஆகியோர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒன்பது பெயர்களும் பெண்களாகவே இருப்பது இதுவே முதல்முறையாகும்.
Discussion about this post