சிவகாசியில் 2019-ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்த படியாக இருப்பது அச்சகத் தொழில். 2019 ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், தினசரி காலண்டர் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தினசரி காலண்டர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், 200-க்கும் மேற்பட்ட மாடல்களில் தயார் செய்யப்படுகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் காலண்டர்கள் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
புதிய வரவாக ரியல் ஆர்ட், பாயில்ஸ் கோல்டு, சில்வர் பாயில்ஸ், லேசர் பாயில்ஸ், விஐபி காலண்டர் மற்றும் 3டி காலண்டர் என 50 -க்கும் மேற்பட்ட புதிய காலண்டர்களும் தயாரிக்கப்படுகிறது.
20 ரூபாய் முதல் 2 ஆயிரம் வரை விலைகளில் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. காகிதம், அட்டை, அச்சு மை, தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரியால் கடந்த ஆண்டை விட தினசரி காலண்டரின் விலை 20 சாதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அச்சு மற்றும் டை கட்டிங் தரமாக இருப்பதால் சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. இங்கு தயாரிக்கப்படும் காலண்டர்கள் இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போல மின்சாரம் கிடைப்பதால், வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் காலண்டர்களை வழங்க முடிவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post