தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம் பாடல்கள். பாடல்களுக்காக மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். அந்தவகையில் 2018-ம் ஆண்டில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிய டாப் 10 பாடல்களை இப்போது பார்ப்போம்..
பாடல் – காதலே காதலே
படம் – 96
இளைஞர்களின் தேசிய கீதமாக மாறிப்போன பாடலாக அமைந்துவிட்டது 96 படத்தில் இடம்பெற்ற காதலே காதலே பாடல். படமும், நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும் என ஒட்டுமொத்த கலவையாக அனைவரையும் ஆட்கொண்டு விட்டது இந்த பாடல்.
படம் – கோலமாவு கோகிலா
பாடல் – எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு
சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்து பாடிய எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு என்ற பாடல் ஒலிக்காத மொபைல் போன்களே இல்லை எனலாம். யோகிபாபுவின் நடிப்பு, நயன்தாரவின் அழகு, இளைஞர்களை கவரும் இசைக்கோர்வை என இந்த பாடல் இசைப்பிரியர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்தது.
படம் – ப்யார் ப்ரேமா காதல்
பாடல் – ஹே பெண்ணே, என் மார்பில் சாய்ந்து சாய்கிறாய்
முழுக்க, முழுக்க காதலர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட ப்யார் ப்ரேமா காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹே பெண்ணே, என் மார்பில் சாய்ந்து சாய்கிறாய் என்ற பாடல் ஒட்டுமொத்த இளைஞர்களை குத்தகை எடுத்தது என்று சொல்லலாம். மெலடியான இசை, காதல்தோய்ந்த வரிகள், எடுக்கப்பட்ட விதம் என இந்த பாடல் ஹிட் லிஸ்டில் தாரளமாக போய் சேர்ந்தது.
படம் – இமைக்கா நொடிகள்
பாடல் – நீயும் நானும் அன்பே கைகள் கோர்த்துக் கொண்டு
த்ரில்லர் படத்தில் இப்படி ஒரு மென்மையான பாடலா என்று வியக்கும் அளவுக்கு இமைக்கா நொடிகள் படத்தில் இடம்பெற்றது நீயும் நானும் அன்பே கைகள் கோர்த்துக் கொண்டு என்ற பாடல். அன்பின் நெகிழ்வை, திருமண உறவின் அழகை, பிரிவின் துயரத்தை வடித்த விதத்தில் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது இப்பாடல்.
படம் – வடசென்னை
பாடல் – என்னடி மாயாவி நீ
அதிரடி இசைக்கருவிகள் இல்லாமல் குரலையே குழைத்து உருவாக்கப்பட்ட என்னடி மாயாவி நீ என்ற வடசென்னை படத்தில் இடம்பெற்ற பாடல், பலரின் ரிங்டோனாக இடம்பெற்றுள்ளது. அதிலும் அந்த பாடலில் இடம்பெற்ற சில வரிகள் கவித்துவம் மிக்கவையாக உள்ளன. உப்புக் காற்றில் இது பன்னீர் காலமா என்று மீனவ மண்ணின் வாழ்க்கையில் மலர்ந்த காதலை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாத அளவுக்கு எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா.
படம் – டிக் டிக் டிக்
பாடல் – குறும்பா
தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவையும், பிள்ளையின் குறும்பை உச்சி முகர்ந்து கொண்டாடும் தந்தையின் மனநிலையையும் படம்பிடித்து காட்டியது குறும்பா பாடல். தாய் பாசத்திற்கு ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ள நிலையில், தந்தையின் பாசத்தை எடுத்துச் சொல்ல வந்துள்ள இந்த பாடல் அப்ளாசை அள்ளியது.
படம் – குலேபகாவலி
பாடல் – குலேபா
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற அடைமொழிக்கு இன்றளவும் நியாயம் செய்து வருகிறார் பிரபுதேவா. அந்தவகையில் துள்ளலும், ஆட்டமும், உற்சாகமும் ஒருங்கே கரம்கோர்த்த பாடலாக அமைந்தது குலேபகாவலி படத்தில் இடம்பெற்ற குலேபா. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்ட பெருமையும் இதற்கு உண்டு.
சொடக்கு மேல சொடக்கு போடுது – தானா சேர்ந்த கூட்டம்
படம் வெற்றி பெறாவிட்டாலும் இந்த பாடலை முணுமுணுக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பள்ளி – கல்லூரி ஆண்டு விழாக்களில், திருமண கொண்டாட்டங்களில் தவறாமல் இடம் பிடித்து அனைவரையும் ஆட்டம் போட வைத்தது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடுது.
படம் – காலா
பாடல் – கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் இடம்பெற்ற மனதை வரும் மெலோடி பாடல் தான் கண்ணம்மா கண்ணம்மா. பதின்ம வயதின் காதலியை நடுத்தர வயதில் சந்திக்கும் போது ஏற்படும் மெல்லிய தடுமாற்றத்தையும் முதிர்ச்சி அடைந்த பக்குவத்தையும் சமவிகதத்தில் கலந்து எழுதப்பட்டு – எடுக்கப்பட்ட இந்த கண்ணம்மா ஆண் – பெண் எல்லா பாலினரையும் கவர்ந்தததில் வியப்பேதும் இல்லை.
படம் – சீமராஜா
பாடல் – உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
சிவகார்த்திகேயன் சமந்தா ஜோடி நடிப்பில் வெளியான சீமராஜா படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ, இதில் இடம்பெற்ற உன்னை விட்டா யாரும் எனக்கில்ல பாடல் காதலர்களை வெகுவாக ஈர்த்து விட்டது. பண்பலை வானொலிகளில் தவறாமல் இடம்பிடித்து இந்த ஆண்டின் ஹிட் லிஸ்ட்டில் அமர்ந்து கொண்டான் இந்த சீமராஜா.
Discussion about this post