ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில் 2 வயது ஆண் குழந்தை சுஜித் கடந்த வெள்ளியன்று தவறி விழுந்தான். இதனையடுத்து குழந்தை சுஜித் பாதுகாப்பாக மீட்கும் பணியை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் குழந்தை சுஜித் மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். முதற்கட்டமாக மதுரை மணிகண்டனின் நவீன கருவி மூலம் குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது, குழந்தை சுஜித் கைகளில் கயிறு மாட்டி இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
இதனையடுத்து சென்னை, நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்வேறு குழுக்கள் வரவழைக்கப்பட்டு குழந்தை சுஜித்தை மீட்கும் பணி அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், குழந்தை சுஜித் மண் சரிவு காரணமாக மெல்ல மெல்ல 88 அடிக்கு துரதிஷ்டவசமாக சென்றுவிட்டான்.
பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டி, குழந்தை சுஜித்தை மீட்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 பொக்லைன் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. குறிப்பிட்ட அடிகளுக்கு பிறகு, பாறைகள் தென்பட்டதால், குழி தோண்டும் பணி கடினமானது.
இதனையடுத்து, ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்றது. கடின பாறைகளால் துளையிட ரிக் இயந்திரம் திணறியது. இதனையடுத்து, 3 மடங்கு திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பணி மேற்கொள்ளப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு வந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மீட்பு பணியை தீவிரப்படுத்தினார். இந்நிலையில், பாறைகளை துளையிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிக திறன் கொண்ட போர்வெல் மூலம் துளையிட்ட பிறகு ரிக் இயந்திரம் மூலம் பாறைகள் துளையிடும் பணி நடைபெற்றது.
இந்த பணி 2 நாட்களாக இரவு பகலாக நடைபெற்றது. இந்நிலையில் அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குழந்தை சுஜித் உயிருடன் மீட்கும் 5 நாள் போராட்டம் சோகத்தில் முடிவடைந்தது.
இதனையடுத்து, குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Discussion about this post