சென்னை அண்ணாசாலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற இருசக்கர வாகனம், மாநகரப் பேருந்துக்கடியில் சிக்கி விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை மேற்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனைக்கு செல்லக்கூடிய A51 பேருந்து, ஒய்எம்சிஏ நந்தனம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் இடதுபுறமாக வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம், மற்றொரு இருசக்கர வாகனத்தை முந்த முயன்றது. அப்போது, நிலைதடுமாறி, அருகில் வந்துகொண்டிருந்த பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நாகலட்சுமி, பவானி என்ற 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவா என்ற நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவர் மட்டுமே பயணிக்க கூடிய இருசக்கர வாகனத்தில், விதிகளை மீறி 3 பேர் பயணித்ததும், அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியதுமே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
Discussion about this post