சென்னை சைதாப்பேட்டையில் மாநகராட்சி பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை ஜோதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. சென்னை மாநகராட்சியில் வேலை பார்த்து வந்த இவர், கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து சடலமாக ஜெயா கண்டெடுக்கப்பட்டார். உடல் நிலை சரியில்லாமல் ஜெயா இறந்து விட்டதாக, அவரது மூத்த சகோதரி தேவி தெரிவித்திருந்தார்.
மாநகராட்சி ஊழியராக இருக்கும் போது உயிரிழந்துள்ளதால், நிவாரணம் பெறுவதற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தேவி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சொத்துகளை அபகரிக்க ஜெயாவின் சகோதரி தேவியும், அவரது கணவர் எத்திராஜும் சேர்ந்து ஜெயாவை கொலை செய்தது தெரிய வந்தது. ஜெயாவை தலையணையால் அழுத்திக் கொன்றதாக கைதான தேவி மற்றும் எத்திராஜ் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Discussion about this post