தமிழகத்தில் தற்போது புதிதாக ஆயிரத்து 930 நியாய விலை கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசிய அவர், நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதி தருமதானபுரம் ஊராட்சியில் உள்ள பகுதி நேர நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார்.
இதேபோல், குறைந்த அழுத்தம் உள்ள இடங்களில் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதனின் கேள்விக்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பதிலளித்தார். விவசாயம் அதிகளவு மேற்கொள்ளப்படுவதால் ஒரு சில பகுதிகளில் குறைந்த அழுத்த மின்சாரம் இருக்கலாம் என்றும் சீரான மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
இதேபோல், அரசு இ-சேவை மையங்கள் செயல்பாட்டில் இல்லாத ஊராட்சிகளில் விரைவில் அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்துள்ளார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
Discussion about this post