கேரளாவில் மூதாட்டி ஒருவருக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லாவிட்டாலும், கொரோனா தொற்று உள்ளதாக 19 முறை பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இது மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா நோய் தொற்று கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வேகமாக குணமடைந்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், 62 வயதான மூதாட்டி ஒருவரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் மருத்துவர்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன. கேரளாவின் பதனம்திட்டா பகுதியைச் சேர்ந்த 62 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இத்தாலியில் இருந்து வந்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததால் நோய் தொற்று பரவியுள்ளது. அந்த மூதாட்டி மூலமாக அவருடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், கடந்த மாதம் 10ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 42 நாட்களாக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக கொரோனா அறிகுறியும் முற்றிலும் மறைந்தது. இதனையடுத்து, அவர் முழுமையாக குணமடைந்து விட்டார் என்பதை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது. இன்றைய தேதி வரை அவருக்கு 19 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனை முடிவுகளும் பாசிட்டிவாகவே இருந்துள்ளன. கொரோனா நோய் அறிகுறி சிறிதும் இல்லாத நிலையில், சோதனை முடிவு தொடர்ந்து பாசிட்டிவ் என வருவது மருத்துவர்களை குழப்பமடைய செய்துள்ளது. இது குறித்து பேசிய பதானம்திட்டா மாவட்ட மருத்துவ அதிகாரி ஷீஜா, தாங்கள் பல முறை கூட்டு மருந்துகளை முயற்சித்ததாகவும், தற்போது மாநில மருத்துவ வாரியத்தின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் கூறினார். மூதாட்டிக்கு நோய் அறிகுறியோ, உடல்நலக் குறைவோ ஏதும் இல்லை. இருந்தபோதிலும் அவரை வெளியே அனுப்பினால், பலருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மீண்டும் ஒருமுறை பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அதிலும் பாசிட்டிவ் என வந்தால், மூதாட்டியை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Discussion about this post