தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது.
சூழலை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து இழப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்வித்தகுதி போன்ற விவரங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தது.
இதனடிப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் கல்வித் தகுதி அடிப்படையில், 10 பேரின் குடும்பத்தில் இருந்து தலா ஒருவருக்கும், காயமடைந்த 9 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Discussion about this post