சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் 17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்து விளக்கேற்றி சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைத்தார். 19-ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.
விழாவில் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.