சறுக்கல்களை சாதனைகளாக மாற்றி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண் கலங்கியது, நாட்டு மக்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கிலோ மீட்டர் தூரத்தில், சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், தொடர்பை இழந்தது. முதல் முயற்சிலேயே இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தெற்கு முனைக்கு மிக அருகில் சென்ற இந்தியாவின் வரலாற்றுச் சாதனையின் பின்னணியில் 16 ஆயிரத்து 500 விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உள்ளது.
சந்திராயன்-2 திட்டத்திற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு, பகலாக உழைத்த உழைப்புக்கு, இன்று நாடே பாராட்டு தெரிவித்து வருகிறது. 95 சதவீதம் வெற்றி கண்டுள்ள நிலையிலும், ஒரு சிறிய பின்னடைவு, விஞ்ஞானிகளை கண்கலங்கச் செய்தது.
1982 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்து, தற்போது அதன் தலைவர் பதவி வரை உயர்ந்துள்ள சிவன், சந்திரயான்-2 திட்டத்தின் மூலம், உலகை இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்தாலும், ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி வருவதற்கு, விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே காரணம் என்றால், அது மிகையாகாது. பெரும் முயற்சியில் ஏற்பட்ட சிறிய சரிவால், மனமுடைந்து கண்ணீர் விட்ட இஸ்ரோ தலைவர் சிவனை, பிரதமர் மோடி தட்டுக்கொடுத்து தேற்றியது, காண்போரையும் கண்ணீர் விட வைத்தது.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில், விஞ்ஞானிகளின் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, விஞ்ஞானத்தில் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார். நிலவை ஆய்வு செய்வோம், நமது விண்வெளித் திட்டங்களில் புதிய உச்சங்கள் இனிமேல் தான் வரவுள்ளது எனவும், இரவு பகலாக உழைத்த விஞ்ஞானிகளின் முயற்சி, ஒரு போதும் வீண் போகாது என நம்புவதாகவும் அவர் கூறியது, அங்கு துவண்டு போயிருந்த விஞ்ஞானிகளிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, சந்திராயன் சாதனைக்காக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post