14ஆவது ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐ.பி.ல் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான அட்டவணையையும் ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் மைதானங்களில் மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல். தொடரில் எந்த அணிகளுக்கும், தங்களது சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏப்ரல் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, டெல்லி அணியுடன் மோதுகிறது.
ஏப்ரல் 16ம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
ஏப்ரல் 19ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், ஏப்ரல் 21ம் தேதி கொல்கத்தா அணியையும், ஏப்ரல் 25ம் தேதி பெங்களூரு அணியையும், ஏப்ரல் 28ம் தேதி ஹைதராபாத் அணியையும் எதிர்த்து சென்னை அணி விளையாடுகிறது.
தொடர்ந்து, மே 1ம் தேதி மும்பை அணியையும், மே 5ம் தேதி ராஜஸ்தான் அணியையும், மே 7ம் தேதி ஹைதராபாத் அணியையும், மே 9ம் தேதி பஞ்சாப் அணியையும், 12ம் தேதி கொல்கத்தா அணியையும், மே 16ம் தேதி மும்பை அணியையும், மே 21ம் தேதி டெல்லி அணியையும், மே 23ம் தேதி பெங்களூரு அணியையும் எதிர்த்து சென்னை அணி களம்காண்கிறது.
இதனைத் தொடர்ந்து, முதல் தகுதிச்சுற்று மே 25ம் தேதியும், எலிமினேட்டர் சுற்று மே 26ம் தேதியும், இரண்டாவது தகுதிச்சுற்று மே 28ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டி, மே மாதம் 30ம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத், டெல்லியில் தலா 8 போட்டிகளும் நடைபெறுகின்றன.
Discussion about this post