கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 134 கோடியே 63 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை 7 நாட்கள் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்கியவர்களின் விபரங்களை தமிழக அரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பணியாளர்கள் சார்பில் சுமார் 14 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடாஸ் சின்டல் ப்ரெயாஸ் கூட்டமைப்பு மற்றும்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஆகியவை தலா 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒரு கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காமராஜர் துறைமுகம் லிமிடெட், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட், ஐஷர் குரூப் ஆகியவை தலா ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் 50 லட்சம் ரூபாயும், நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post