தேர்தல்களில் வாக்களிக்க இனி புகைப்படத்துடன் கூடிய வாக்குசாவடி சீட்டை மட்டும் தனியாக பயன்படுத்த முடியாது என்றும் வாக்களிப்பதற்கு 12 ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல், பல்வேறு மாநில சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல்கள் வரவுள்ளநிலையில் இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டுகளை மட்டுமே ஆவணமாக கொண்டு வாக்களிப்பதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனது. அதன்படி, வாக்குச்சாவடி சீட்டுடன் எடுத்துவர வேண்டிய 12 ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை ஆகியவற்றை காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு புகைப்படத்துடன் அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள் வங்கிகள் அல்லது தபால் நிலைய கணக்கு புத்தகங்கள் எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் அட்டை, பதிவாளர் ஜெனரலால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அடையாள அட்டை, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி. ஆகியோரால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை ஆகியவற்றை வாக்குச்சீட்டுடன் எடுத்து வர வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post