யுனஸ்கோ அங்கிகாரம் பெற்ற உதகை மலை ரயிலின் 111-வது பிறந்த நாள் விழா உதகை ரயில் நிலையத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரயில் நிலையம் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு இதோ உங்களுக்காக…
ஊட்டி என்றாலே குளுகுளு என்ற இதமான சூழலும், பசுமையான மரங்களும் அனைவரது மனதிலும் நினைவுக்கு வரும். இதற்கடுத்து, நம் நினைவுக்கு வருவது நீலகிரி மலை ரயில்.
நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய அனுபவம். அப்படிப்பட்ட, நீலகிரி மலை ரயில் தொடங்கி 111-வது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த நூற்றாண்டு பழமையை கொண்டாடும் விதமாக ரயில்வே பணியாளர்கள், ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகே பெர்ன்ஹில் வரை இயக்கப்பட்டது. தொடர்ந்து 1909 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1885 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் நீலகிரி ரயில்வே கம்பெனி உருவாக்கப்பட்டது. 1891-ஆம் ஆண்டு சென்னை பிராந்திய ஆளுநர் வென்லாக் பிரபு நீலகிரியில் மலை ரயில் பாதையை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலைப் பாதையில் 27 கிலோ மீட்டருக்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1899 ஜூன் 15-இல் திறக்கப்பட்டது.
1908-இல் குன்னூரில் இருந்து 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் 19 கிலோ மீட்டர் தூரம் உதகைக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த மலை ரயில் பாதையில் 16 குகைகளும், 216 வளைவுகளும், 250 பாலங்களும் உள்ளன. ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர் கேஜ் ரயில் பாதைகளில் மிக நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
ஆங்கிலேயே பொறியாளர் மிக்சல் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு, இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகப் புகழ் பெற்ற நூற்றாண்டு பழைமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை யுனஸ்கோ நிறுவனம் கடந்த 2005 ஜூலை 15-ஆம் தேதி உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post