புத்தாண்டு கொண்டாத்தின் போது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 108 ஆம்புலன்ஸை நிறுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக, பொதுமக்கள் நள்ளிரவில் பல்வேறு இடங்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். கொண்டாட்டத்தின் போது, வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் பரிதாபம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க, மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வைக்கவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் 80 அரசு மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சைப் பிரிவு செயல்படுவதாகவும், அதில், எலும்புப் பிரிவு, பொதுப்பிரிவு என 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முதலுதவி அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.