உலக சினிமாவில் புதிய பரிமாணாத்தையும், திரைப்பிரியர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தையும் கொடுத்த ஜேம்ஸ் கேம்ரூன்னின் அவதார் திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகளாகியுள்ளது.
ஹாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களை கொடுத்து தற்போது வரை பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் வைக்காத இயக்குனர் என்றால் ஜேம்ஸ் கேமரூன் தான். பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு இவரிடமே சரியான விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அவர் இயக்கிய அவதார் திரைப்படம் ஹாலிவுட் வரலாற்றில் மட்டும் அல்லாமல் உலக சினிமா வரலாற்றில், ஒரு மைல் கல் என்று கூறலாம். அவதார் படம் வெளிவந்து இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது.
நடக்க முடியாத ராணுவ வீரரான கதையின் நாயகன் ஜேக், தனது சகோதரனுக்குப் பதிலாக “பண்டோரா” என்ற கிரகத்திற்கு ராணுவத்தால் உளவாளியாக அனுப்பி வைக்கப்படுகிறான். ஜேக் அக்கிரக வாசியாக மாறி பண்டோரா கிரக வாசிகளுடன் இணைய முயற்சிக்கிறான்.
பண்டோராவின் பயங்கர மிருகங்கள் ஜேக்கைக் கொல்ல வருகின்றன. அங்குள்ள மலை மக்களின் தலைவரின் மகள், ஒரு சமயத்தில் ஜேக்கைக் காப்பாற்றுகிறாள். இதனையடுத்து இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ஜேக், பண்டோராவின் நிரந்தரக் குடிமகனாக மாற, தனது காதலியிடம் போர்ப்பயிற்சி பெறுகிறான் . ராணுவத் தளபதியிடம் பண்டோராவின் நிலைமைகளையும், மக்களையும் பற்றி விளக்குகிறான். அடர்ந்த காடு, பிரம்மாண்டமான மரம், பறவைகள், விலங்குகள், இயற்கை மீது அம்மக்களுக்கு இருக்கும் பாசம், இறந்தவர்களை அவர்களது ஏவா என்ற கடவுளிடம் மன்றாடி உயிர்பிழைக்க வைப்பது போன்ற செய்திகளையும் கூறுகிறார். தளபதி அந்த கிரகத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பண்டோரா கிரக வாசிகளிடம் கட்டளையிடுகிறார். ஜேக் அதை எதிர்க்கிறான்.
பண்டோராவை அழிப்பதை, ஜேக்கிடம் இருக்கும் பெண் விஞ்ஞானியும் கடுமையாய் எதிர்க்கிறார். ஒரு பெண் விமானியும் அவரது குழுவினரும் சேர்ந்து ராணுவ தளபதிக் கெதிராக பண்டோராவைப் பாதுகாக்கும் போரில் தங்களை ஈடுபடுத்தி உயிர் தியாகம் செய்கிறார்கள். ராணுவத்தளபதி பண்டோரா மீது குண்டுகளை வீசி நாசம் செய்கிறார். ஜேக்கும் அவனது காதலியும் மக்களைத் திரட்டிப் போராடி, இறுதியாக பண்டோராவை ஜேக்கும் காப்பாற்றுவதாக கதை முடிகிறது.
2009-ல் வெளியான `அவதார்’ திரைப்படம், ஹாலிவுட் சினிமா வரலாற்றில் ஒரு புது ட்ரெண்டையே உருவாக்கியது என்றே சொல்லலாம். பல்வேறு தொழில்நுட்பங்களும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் VFX-ம் அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அவதார் வெளியாகி மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் வசூல் ஈட்டியது. ஆஸ்காரில் சில விருதுகளையும் அவதார் தட்டி சென்றது.
இந்நிலையில் ’அவதார்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக்கியிருக்கிறது. வடக்கு ஐரோப்பியாவில் உள்ள நாடான எஸ்டோனியாவில் அவதாரின் 2 பாகங்களின் காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், படம் 2020 ல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Discussion about this post