பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை மருத்துவ கல்வியில் முறையாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த ஆண்டில் பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மற்ற பிரிவு மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதன்படி, மருத்துவ கல்வியில் நடப்பாண்டில் கூடுதலாக 25 சதவிகித இடங்களை மருத்துவ கல்லூரிகள் உருவாக்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செய்வதன்மூலம் பொதுப்பிரிவு மாணவர்கள் பாதிக்காதவகையில், இந்த கூடுதல் இடங்கள் பாதுகாக்கும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
200 மருத்துவ மாணவர்களுக்கு மிகாமல் இருக்கக்கூடிய கல்லூரிகளுக்கு மட்டுமே முதல்கட்டமாக இந்த கூடுதல் இடங்கள் உருவாக்குவது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் 11ம் தேதிக்குள் மருத்துவ கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்ட சீட்டுகள் குறித்து மாநில அரசு, மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post