நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு, வருகிற கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளிப்பதற்கு வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு கடந்த வாரத்தில் ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததையடுத்து மசோதா அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் குஜராத்தின் ஆமதாபாத்தில் ஆயிரத்தி 500 படுக்கைகள் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்பு அளிக்க பாஜக அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.
நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டம், பாஜக அரசின் அரசியல் உறுதிப்பாட்டால் நிறைவேற்றப்பட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் கல்வி ஆண்டில், நாடு முழுவதும் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும், 900 பல்கலைகழகங்களுடன் இணைந்த 40 ஆயிரம் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post