ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை – அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

சிறைக்குள் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு சிறைக் கைதிகள் குறிப்பிட்ட நேரத்தில் சொந்த ஆடைகளை அணியவும், தொலைக்காட்சி பெட்டிகளை பயன்படுத்தவும் அனுமதி இருப்பதாக குறிப்பிட்டார். அதேசமயம், செல்போன் கொண்டு செல்வது குற்றம் என குறிப்பிட்ட அமைச்சர் சி.வி சண்முகம், அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

நீதிமன்றம் மற்றும் காவல்துறையை விமர்சித்த விவகாரத்தில், ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதிபடத் தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி, ஆளுநர் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

 

 

Exit mobile version