இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில், இந்தியாவும் ஜப்பானும் மோதியது. போட்டி தொடங்கிய 10வது நிமிடம் மற்றும் 45வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஜப்பான் அணி இரண்டு கோல்களை அடித்தது. இந்திய அணி சார்பில் 23வது நிமிடத்தில் பதில் கோல் போடப்பட்டது. இறுதிவரை இந்திய அணி கோல் எதுவும் அடிக்காததால், 2க்கு ஒன்று என்ற கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது. இதனால், இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. பாய்மர படகு பிரிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷெர்வேகர் இணை 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. ஆண்கள் பாய்மர படகு போட்டியில் வருண் தக்கார் ,கணபதி செங்கப்பா ஜோடி வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்றது. ஓபன் லேசர் பிரிவில் இந்தியாவின் ஹர்சிதா தோமர் வெண்கல பதக்கம் வென்றார். இதனிடையே, ஆண்கள் குத்துச்சண்டை பிரிவில் அரையிறுதி போட்டியில் இருந்து இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன் காயம் காரணமாக விலகியுள்ளார். எனவே, அவருக்கு வெண்கல பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் ஒரே நாளில் 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தி உள்ளனர்.
Discussion about this post