டெல்லியில் பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் மோதல் வெடித்தது.
கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றனர்.
இதில் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தியின் நினைவிடம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
டெல்லி நகருக்குள் பேரணியாக சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் அவர்களை விரட்டி அடித்தனர். விவசாயிகள் போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.