முழு அடைப்பு போராட்டம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, வடமாநிலங்களில் நடைபெற்று வரும் கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டங்களால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 26ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் விவவசாயிகள் ஐந்து கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், சுமூக தீர்வு எட்டப்படாததை அடுத்து, இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா, புவனேஸ்வர் நகரங்களில் இடதுசாரிகள், விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

மேங்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே விவசாயிகளின் போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு என வலியுறுத்தினர். முழு அடைப்பு போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலங்கானா அரசு ஆதரவு அளித்துள்ளதால், பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர், அரை நிர்வாணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து சேவை ஸ்தம்பித்தது.

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இடதுசாரிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தும் பாடல்களை பாடி நடனமாடியதுடன், கபடி விளையாடியும் உற்சாகமாக போராட்டத்தை வழிநடத்திச் சென்றனர்.

 

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ரயில் தண்டவாளத்தில் படுத்து சமாஜ்வாதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் கல்புர்கியில் இடதுசாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், முழு அடைப்பு போராட்டத்தால், பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

 

Exit mobile version