வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான இரண்டாவது சந்திப்பு, மிக விரைவில் நடைபெற உள்ளதாக, அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு வடகொரியாவின் புதிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றார். அதன் பின்னர், அடுத்தடுத்து அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை அந்நாடு நடத்தியது. இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்தது. வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எந்தநேரமும் போர் வெடிக்கலாம் என்று அச்சமும் நிலவியது. வடகொரியா மீது ஐ.நா.வும், அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.
இந்தநிலையில், சியோலில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதன்பிறகு, கடந்த ஏப்ரலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்துப் பேசினர். இது, கொரிய தீபகற்பத்தில் புதிய வரலாற்று அத்தியாயத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு ஜூன் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். உலக நாடுகள் உற்றுநோக்கிய இந்த சந்திப்பிற்கு பிறகு, வடகொரியாவின் நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அணுஆயுத சோதனைகளை நிறுத்த வடகொரியா முன்வந்தது.
இந்தச்சூழலில் கிம் ஜாங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.