வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகித உயர்வானது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எம்சிஎல்ஆர் என்று சொல்லப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 5 சதவிதமாக உயர்த்தியது.
இதன்மூலம் வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன்களுக்கான வட்டி விகிதமானது 8.50 சதவிதமாக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தனியார் வங்கிகளும் தங்கள் வட்டி விகிதத்தை 5 சதவிதம் அளவுக்கு உயர்த்தும் சூழலுக்கு தள்ளப்பட்டன.
குறிப்பாக ஐசிஐசிஐ வங்கியின் கடன் வட்டி விகிதமானது 8.65-ஆக தற்போது அதிகரித்துள்ளது. எச்டிஎப்சி வங்கியில் 30 லட்ச ரூபாய் கடன்பெற்றால் இனி இதன் கடன் விகிதம் 8.85 சதவிதம், இதுவே 30 லட்சத்திற்கு மேல் 75 லட்ச ரூபாய் வரையிலான கடனுக்கு 9 சதவிதம், 75 லட்சத்திற்கு மேலான கடன் தொகைக்கு 9.05 சதவிதம் வட்டி வசூலிக்கப்படும்.
இந்த புதிய வட்டி விகித முறையானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வங்கிகளில் கடன்பெறும் முறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் அவதிக்குள்ளாகும் நடுத்தரவாசிகள் தற்போதைய கடன் வட்டி விகித உயர்வால் கூடுதல் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.