வங்கக் கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் சூழல் இருப்பதால், வடமேற்கு வங்கக் கடல், ஆந்திராவை ஒட்டிய கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் நிலவி வரும், தீவிரக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒடிசா மற்றும் கடலோர ஆந்திராவில் கனமழை பெய்யும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தீவிரக் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வடக்கு ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினம் மற்றும் ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடமேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.