பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.
கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்ததில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு பரிந்துரையின்படி, ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் 7 பேரையும் விடுவிக்க ஆளுநரிடம் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரும், ஆளுநரை நேரில் சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்று மனு அளித்தனர். இதனால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post