விருதுநகரில் ரத்த தானம் வழங்க வலியுறுத்தி நடைபெற்ற 6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் தனியார் அமைப்பு சார்பில் ரத்த தானம் வழங்க வலியுறுத்தியும், உடற்பயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக மாரத்தான் பேட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று விருதுநகரில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், விருதுநகர், கோவை, சங்கரன்கோவில், நெல்லை, சேலம், சிவகாசி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சிவகாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.