மோடியை புகழ்வதா?- கட்சியை விட்டு விலகிய பொதுச்செயலாளர்

 

சரத்பவார் , பிரதமர் மோடியை புகழ்ந்ததால் , தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர், கட்சியை விட்டு விலகியுள்ளார்

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் , மோடி மீது அபாண்டமாக குற்றம்சாட்டப்படுகிறது என்றும் , ஒப்பந்த விவகாரத்தில் எந்தவிதமான ஊழலும் நடந்திருப்பதாக நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சரத்பவாரிடம் இருந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து வந்தது அனைவரது புருவத்தையும் உயரச்செய்துள்ளது. இந்நகர்வை சிவசேனாவும் விமர்சனம் செய்துள்ளது.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் அக்கட்சிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும், மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

1999-ம் ஆண்டு சோனியா காந்தியின் வெளிநாட்டு குடியுரிமை குறித்து பேசியதால் சங்மா, சரத் பவார், தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களால் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதில் தாரீக் அன்வர் முக்கியப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத் பவாரின் கருத்துக்களோடு முற்றிலும் வேறுபடுவதாக தாரீக் அன்வர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version