டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிச்சாமி நேற்று திறந்து வைத்தார். முதல்கட்டமாக அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டநிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் உள்ள அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 72 ஆயிரத்து 78 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 அடியில் இருந்து 112 அடியாக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 70,000 கனஅடியில் இருந்து 60,000 கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவும் 55,000 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக சரிந்துள்ளது. இருப்பினும், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 12 நாளாக இன்றும் நீடிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post