காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனையொட்டி அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் மேல் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 கன அடியை எட்டியது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வந்தது. இந்தநிலையில், கர்நாடகாவில் மழை குறைந்ததை அடுத்து, அணைகளிலிருந்து திறந்து விடப்படும் நீர் படிப்படியாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 48 ஆயிரத்து 65 கன அடியிலிருந்து 61 ஆயிரத்து 291 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.31 அடியாக உள்ளது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 93.96 டி.எம்.சி.யாக உள்ளது. இதனிடையே, ஒகேனக்கல்லில் அதிகளவு நீர் செல்வதால், 20வது நாளாக அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post