டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதன்மூலம் முதலாவதாக, முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம். இரண்டாவதாக, முத்தலாக் வழங்கியபின் கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம்.
மூன்றாவதாக, முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் முத்தலாக் அவசர சட்டத்துக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் மசூத் அன்சாரி, ‘ரைசிங் குரல் ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனம், வழக்கறிஞர் தேவேந்திர மிஸ்ரா ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அவசரச்சட்டத்தில் உள்ள விதிமுறைகள் சட்டவிரோதமானது, நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு 28-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.