தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்தட்டுப்பாடு வராத அளவிற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்சார உற்பத்தி செய்ய ஏதுவாக தினமும் 72ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லி சென்றுள்ளார். மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, தேவையான மின்சாரத்தை விட அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்கட்சிகள் பொய்யான வதந்தியை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது என்றும் , மின்மிகை மாநிலம் என்பதை மத்திய அரசு தமது சமன்பாட்டு அறிக்கையில் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார் .
தமிழகத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் மத்திய அரசிடமிருந்து நிலக்கரி வரத்தொடங்கி விடும் என்றும் அதன்பின் நிலக்கரி கையிருப்பு அதிகமாகிவிடும் எனத் தெரிவித்தார்.
30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது என்றும் இது குறித்து விரைவில் ஒப்பந்தம் போட உள்ளதாகவும் அவர் கூறினார்.
உடனடியாக தூத்துக்குடிக்கு 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மத்திய மின்சாரத்துறை இணையமைச்சர் ஆர்.கே. சிங்கை சந்தித்த தங்கமணி, தமிழக்கத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
Discussion about this post