ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் , ஒரு கோடியே 47 லட்சம் பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் அரோக்யா யோஜனா மற்றும் ஆயுஸ்மான் பாரத் திட்டத்துடன் தமிழக அரசு ஒருங்கிணைத்துள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக ஒருங்கிணைந்த இத்திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு காப்பீட்டு அடையாள அட்டையையும் மருத்துவ சிகிச்சைக்கான முன் அனுமதியையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் 1 கோடியே 47 லட்சம் பேர், இனி ஆண்டிற்கு 5 லட்சம் வரையிலான கட்டணமில்லா மருத்துவ சேவையை பெற முடியும் என்றார்.
மேலும் சிறப்பு உயர் சிகிச்சையும் இந்த திட்டம் மூலம் அளிக்கப்படும் . பழைய காப்பீடு அட்டை மூலமாகவே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த அவர், இதற்கென புது அட்டை தேவையில்லை என்று அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Discussion about this post