போக்குவரத்து சிக்னலை பின்பற்றாதவர்களுக்காகக் குற்ற பதிவேடு முறை வர இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
நாள்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சிக்னலை கடக்க இவ்வளவு நேரமா என சலித்துக்கொள்ளாத வாகன ஒட்டியே இருக்க முடியாது.
அதேநேரம், சிலருக்கு சிக்னலில் நிற்பது என்பது வேப்பங்காயாக கசக்கிறது. இவர்கள், போக்குவரத்து விதிகளைப் புறந்தள்ளி விட்டு; அதி வேகமாகவோ அல்லது திடீரென குறுக்கே புகுந்தோ சென்று விடுவார்கள். இவர்களால், பின்னால் வருபவர்களும் போக்குவரத்து சிக்னலை மீற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்து விதிகள் மீறப்படுவதால், அதிகப்படியான விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதற்குக் கடிவாளம் போட, புதிய திட்டம் அறிமுகமாக இருக்கிறது. பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம், ஒரே அட்டை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, போக்குவரத்து துறை முழுவதுமாக மின்னணு மயமாக்கப்பட உள்ளது.
அதன்படி, வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் அட்டையில், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகனக் காப்பீடு விவரம் என அனைத்தும் பதிவாகும்.
முதற்கட்டமாக, புதிதாக ஓட்டுநர் உரிமம் கேட்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட் அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதே அட்டையில் சாலை விதிகளை மீறியது, அவர்கள் கட்டிய அபராதத் தொகை, அவர்கள் செய்த குற்றத்தின் நிலை போன்றவையும் பதிவேற்றம் செய்யப்படும்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும், ஒரு தகவல் பதிவு பராமரிக்கப்பட உள்ளது. இந்தக் குற்ற பதிவேடு முறை அமலுக்கு வரும்போது, அதிக முறை தவறிழைத்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.