பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோவில் விஞ்ஞானி ஆக பணியாற்றி வந்தவர் நம்பி நாராயணன். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர், திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்தவர்.
இந்த நிலையில், மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, ஃபவுஸியா ஹுசேன் ஆகியோர் மூலமாக ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்பனை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து 1994 ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கேரளா போலீஸாரால் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார்.
50 நாட்கள் சிறையில் இருந்த அவர் மீது, பொய்யான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டதாக சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. பின்னர் விடுவிக்கப்பட்ட நம்பி நாராயணன், 2001ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
தன்னை வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 20 வருடங்களாக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.